விஜயதசமி அன்றாவது கோயில்கள் திறக்கப்படுமா?… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு!

விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளான விஜயதசமி அக்டோபர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் கோவில்களை திறக்க அனுமதிக்கக் கோரி கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தை கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் கோவிலை திறக்காமல் பிடிவாதமாக இருப்பதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழிபாட்டு தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இதனால், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அடங்கிய விடுமுறைகால அமர்வில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்தார்.

விஜயதசமி தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மத்திய அரசு வழிகாட்டு விதிகளை அறிவித்துள்ளது எனவும், இதுசம்பந்தமாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து, விஜயதசமி அன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என பிற்பகல் 1:30 மணிக்கு விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version