முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நாளை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று இரவு 8.40 மணிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த ரயில் நாளை காலை 7.30 மணிக்கு தென்காசி சென்றடையும். அங்கு இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதன் பிறகு விழாவில் பங்கேற்கிறார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க முதன்முறையாக இப்போதுதான் ரயிலில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சரின் பயணத்திற்காக பொதிகை ரயிலில் சலூன் (சொகுசு) பெட்டி இணைக்கப்படுகிறது. இதில் சொகுசு ஓட்டலில் உள்ளதுபோல் பல்வேறு வசதிகள் உண்டு. இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு செல்வதற்காக ‘சலூன்’ என்ற சொகுசு வசதிகள் கொண்ட தனிப்பெட்டியை உருவாக்கி உள்ளது.
இந்த சலூன் பெட்டி என்பது நகரும் வீடு போன்றது. பாத்ரூம் வசதியுடன் கூடிய 2 பெட்ரூம், பெரியஹால், டைனிங் டேபிள், உட்கார சோபா, நாற்காலி, சமையலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் உண்டு. சமையலறையில் தேவையான பாத்திரங்கள், சுடுநீர், குளிர்சாதன பெட்டி சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர், போன்றவை பொருத்தப்பட்டிருக்கும். இது ரயிலின் கடைசி பெட்டியாக இணைக்கப்படுவதால் பின்புறம் இருக்கும் ஜன்னல் மூலமும் இயற்கை அழகை ரசிக்க முடியும்.
பெரிய நட்சத்திர விடுதியில் இருக்கும் அனைத்து வசதிகளையும் இந்த ரயில் பெட்டியில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் வழங்குகிறது. பயணிகள் தொந்தரவு இல்லாத பயணத்தை இதில் மேற்கொள்ள முடியும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சொகுசு சலூன் பெட்டியில் பயணம் செய்ய இருப்பதால் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.