நடிகர் விக்ரமின் கோப்ரா திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று வந்த செய்தி வதந்தி என படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்து வரும் இப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்புகளில் நடித்துள்ளார். விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளது கூடுதல் ஹைலைட்.
மேலும் ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. கடந்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் 13 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு, இங்கு மீண்டும் சில காட்சிகளை படமாக்கியது.
தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் பணிகள் 95% முடிவுற்றதாக தெரிகிறது. இதனால் வரும் ஜூலை மாதம் இந்த படத்தை வெளியிட படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘கோப்ரா’ படம் ஓடிடி தளமாக நெட் ஃப்ளிக்ஸ்-ல் வெளியாக உள்ளதாக செய்தி பரவியது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள படத்தயாரிப்பு நிறுவனம், இந்த தகவலை மறுத்தோடு, இது ஒரு பொய்யான செய்தி என குறிப்பிட்டுள்ளது.