நவம்பர் முதல் வாரத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்படும்…

கொடிய நோயான கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.

அடுத்த அறிவிப்பு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது.

இதனால் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் நடத்த முடியாமல் போனது. இதனையடுத்து அதுதொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டு, அதன்படி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 15-ந்தேதி முதல் வருகிற 30-ந்தேதிக்குள் ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்த உயர்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் இறுதி செமஸ்டர் தேர்வை அறிவித்து நடத்தி வருகின்றன.

அந்தவகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 21-ந்தேதி முதல் ஆன்லைனில் தேர்வை நடத்தி வருகின்றது. அண்ணா பல்கலைக்கழகம் நேற்று முதல் ஆன்லைனில் தேர்வை தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் முதல் ஆண்டு மாணவர்களை தவிர, இதர மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும்? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தன்னுடைய ‘டுவிட்டர்’ பதிவில் பதிலை தெரிவித்து இருக்கிறார். அதில், ‘கொரோனா நோய்த்தொற்றையொட்டி 2020-21-ம் கல்வியாண்டில் முதல் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான கால அட்டவணையை நிபுணர் குழு தயாரித்தது. அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்றுக்கொண்டு இருக்கின்றது’ என்று கூறியுள்ளார்.

அதன்படி, முதல் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ந் தேதிக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வகுப்புகள் 2-ந்தேதி அல்லது முதல் வாரத்தில் தொடங்கும் என்று தெரிகின்றது. இதற்கான மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 2020-21-ம் கல்வியாண்டுக்கான கல்வி நேர இழப்பை ஈடுசெய்ய கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் , அடுத்தடுத்த ஆண்டுகளில் கல்வியாண்டு தொடங்குவதற்கான தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் விடுமுறைகளை குறைக்க வேண்டும் எனவும், அப்படி செய்யும்போது இந்த ‘பேட்ச்’ மாணவர்கள் சரியான நேரத்தில் பட்டத்தை பெறுவார்கள் என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருக்கின்றது.

Exit mobile version