காங்கிரசில் யாருக்கும் மரியாதை கிடையாது… நடிகை குஷ்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் மரியாதை கிடையாது என்று நடிகை குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க.வில் குஷ்பு
டெல்லியில் நேற்று ஜே.பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த நடிகை குஷ்பு, இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது குஷ்பு கூறியதாவது:-
முருகனுக்கு நன்றி
நிறைய மகிழ்ச்சியோடு டெல்லியில் இருந்து திரும்பியுள்ளேன். ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. பா.ஜ.க.வில் இருக்க முக்கியக் காரணம் மாநிலத் தலைவர் முருகன் எடுத்த முக்கிய முயற்சிதான். அவர் எடுத்த முயற்சியால்தான் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். நன்றி முருகன் சார்.

மரியாதை இல்லை
ஒரு கட்சி பலப்படுவதற்காக ஒரு தலைவர் எல்லோரிடமும் பேசி இந்தக் கட்சிக்கு வாருங்கள் என்று எல்லோருக்கும் புரியவைத்து அழைக்கிறார். இன்னொரு தலைவர் 6 வருடங்களாக அந்தக் கட்சியில் இருந்ததற்குப் பின்னரும் வெறும் நடிகையாகத்தான் பார்த்தேன் என்கிறார். காங்கிரஸில் இருக்கிறவர்களுக்கும் மரியாதை கிடையாது. வெளியில் போகிறவர்களுக்கும் மரியாதை கிடையாது.
ஒருவர் வெளியே போகிறார் என்றால், ஏன் போகிறார் என்று யோசிக்கும் திறமையும் கிடையாது. 6 வருடம் கழித்துத்தான் நான் நடிகையாக இருப்பதாகத் தெரிகிறதா? நான் பாஜகவுக்குப் போவதால் எனக்கு மூளை இல்லை எனச் சொல்லியிருக்கிறார். இப்போதுதான் எனக்கு மூளை இருக்கிறது என்று அவர் புரிந்துகொண்டார் என்றால் அவருக்கு நன்றி.

மூளையில்லாத காங்கிரஸ்
என் மீது காங்கிரஸ் சார்பில் வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு கட்சி அலுவலகம் சென்றபின் பதிலளிப்பேன். 6 வருடங்களாக அந்தக் கட்சியில் இருந்து என்னுடைய நேரம், கடினமான உழைப்பு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெளியில் வரும்போது சிந்திக்கிற, மூளை வளர்ச்சியில்லாத ஒரு கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

பதிலளிப்பேன்
தி.மு.க.விலிருந்து வரும்போது நான் குற்றச்சாட்டுகள் வைக்கவில்லை. காங்கிரஸிலிருந்து வெளியே வரும்போதும் குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனால், என்னைப் பற்றி சொல்லும்போது நிச்சயமாக பதிலடி கொடுத்துத்தான் ஆக வேண்டும். கமலாலயம் சென்றபின் உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version