இப்போது பரவிவரும் கொரோனா வைரஸைக் காட்டிலும், 10 மடங்கு வேகமாக பரவக்கூடிய சக்திவாய்ந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்று மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அடுத்தடுத்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸால், இப்பொழுது உலக நாடுகள் அனைத்தும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகாதாரத்துறை அமைப்பும், அந்தந்த நாடுகளும் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், வைரஸ் பரவலின் வேகத்தை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், ஏற்கெனவே பரவிவரும் கொரோனா வைரஸைக் காட்டிலும் 10 மடங்கு அதிக சக்திவாய்ந்த புதிய கொரோனா வைரஸை மலேசியா கண்டுபிடித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுவரை சுமார் 45 பேரிடம் இப்புதிய கொரோனா வைரஸ் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு வந்த சிவகங்கையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரால் தான் இப்புதிய கொரோனா வைரஸ் தொற்று, மற்ற 45 பேருக்கும் பரவியுள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனிமைப்படுத்துதலைக் கடைபிடிக்காமல் விதிமுறைகளை மீறியதால், இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களிடமும், இந்த சக்திவாய்ந்த கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், இந்தப் புதிய கொரோனா வைரஸ் முன்பை விட அதிவேகமாக பரவும் என்றும், ஏற்கெனவே இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், அத்தடுப்பூசிகளால் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளனர்.