கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது, இந்த நிலையில் மாத மாதம் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முதல் பொதுப்போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்தது, கடந்த 5 மாதங்களாக பொது போக்கு வரத்து முடக்கப்பட்டதால் பேருந்து நிறுத்தங்கள் களை இழந்து காணப்பட்டன. வீடுகள் இன்றி சாலையோரம் வசிப்பவர்கள் பேருந்து நிறுத்தங்களை தங்களது இருப்பிடமாகவே பயன்படுத்தினார்கள். மேலும் தொடர் பராமரிப்பு இல்லாமல் பஸ் நிறுத்தங்கள் பாழடைந்து போய் அலங்கோலமாக காட்சி அளித்தன.
5 மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் பஸ்கள் இயங்கியதால் நேற்று அதிகாலையிலேயே பஸ் நிறுத்தங்களில் மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதனால் பஸ் நிறுத்தங்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தன . மேலும் ஏறக்குறைய 5 மாதங்களுக்குப் பிறகு மாநகர பஸ்களுக்காக பல பயணிகள் காத்திருந்ததையும் பார்க்க முடிந்தது. இதனால் பஸ் நிறுத்தங்கள் மீண்டும் பரபரப்படைந்தது.மக்களும் மெல்ல இயல்பு வாழ்க்கையை நோக்கி நகர தொடங்கியுள்ளனர்.