காண்டாமிருகங்களை காப்பாற்றும் கொரோனா!!!

தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடுபவர்களால் கொல்லப்படும் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த 6 மாதங்களில் பாதியாகக் குறைந்துள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது நாடு தழுவிய கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் சர்வதேச விமான தடை காரணமாகவே சாத்தியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், தென்னாப்பிரிக்காவில் 166 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டன. இது 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 316 ஆக இருந்தது. முந்தைய ஆண்டை விட இது 53% குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது.

 தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டுகளாக காண்டாமிருக வேட்டையாடலை தடுக்கும் போராட்டம்  நடந்து வருகின்றது. ஆசிய நாடுகளான சீனா மற்றும் வியட்நாமில்  அதிகளவு காண்டாமிருகத்தின் கொம்புகள் தேவைப்படுகிறது. அங்கு கொம்பு ஒரு பாரம்பரிய மருந்து பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருப்பதால் வேட்டைக்காரர்கள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநியோகம், பயணம் போன்ற பல்வேறு தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பல ஆண்டுகள் தடுக்க முடியாமல் இருந்த இந்த காண்டாமிருக வேட்டையாடல் தற்போது குறைந்துள்ளது என  வனத்துறை தெரிவித்துள்ளது.

 ஆனால் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், காண்டாமிருக வேட்டையாடுதல் மெதுவாக அதிகரித்துள்ளது என்றும் எச்சரித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில்  மார்ச் 27 அன்று ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஜூன் இறுதி வரை மூன்று மாதங்களில், நாடு முழுவதும் 46 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன.  காண்டாமிருகக் கொம்பு முக்கியமாக கெரட்டினால் (Keratin) ஆனது, இது மனித விரல் நகங்களில் உள்ள அதே பொருளாகும். இது பொதுவாக தூள் வடிவில் விற்கப்படுகிறது. புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுவதால் அதிகளவில் கடத்தப்படுகிறது.

Exit mobile version