கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 3 மாணாக்கர் பலியானத்திற்கு மாவட்ட ஆட்சியரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
கடலூர் தனியார் பள்ளி வேன் இன்று காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது. வேன் தூக்கி வீசப்பட்டு சல்லி சல்லியாக நொறுங்கியது. இதில் பயணித்த சாருமதி (15), நிமலேஷ் (10) என்ற இரு மாணாக்கர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுனர். காயமடைந்த மேலும் இரு மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் (15) என்ற மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விபத்தை நேரில் பார்த்த மக்கள் கேட் கீப்பர் கேட்டை சரியாக இயக்காததே காரணம் எனக் குற்றம் சாட்டினர். தென்னக ரயில்வேயோ வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, பெற்றோருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கேட் கீப்பர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அமைச்சர்கள் சி.வி.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் சுரங்கப் பாதை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆட்சியர் சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஓராண்டாக அனுமதி வழங்கவில்லை என ரயில்வே நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. ரயில் மோதி மூன்று மாணாக்கர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
