லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல வருடங்களாக அபார வெற்றி பெற்று லாபத்தில் இயங்கி வந்து கொண்டிருந்த லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த நான்கு ஆண்டுகளாக சரிவை சந்தித்துள்ளது. அதனால் கடும் நிதி நெருக்கடி மற்றும் பெரும் நஷ்டம் அதிகரித்து வருவதால். தற்போது லட்சுமி விலாஸ் வங்கி திவால் ஆகும் நிலைமையில் உள்ளது. இதனை தொடர்ந்து வங்கி தனது செயல்பாடுகளை மீட்கும் நடவடிக்கைகள் எடுத்தது.
ஆனால் எந்த விதமான நடவடிக்கைகளும் கை கொடுக்காததால் தற்போது வாடிக்கையாளர்களின் நலனையும் கருதி இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்தது. மருத்துவ சிகிச்சை, கல்வி போன்ற எதிர்பாராத செலவினங்களுக்காக மட்டுமே ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்கமுடியும். டிசம்பர் 16 வரை இந்த கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏ. டி.எம் ல் இருந்து பணத்தை அவசர அவசரமாக எடுத்து வருகின்றனர். ஆனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மக்களுக்கு பணத் தேவை அதிகரித்துள்ள இந்த சமயத்தில், 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று நிர்ணயித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக வாடிக்கையாளர்கள் பலர் கூறுகின்றனர். அதேசமயம் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ஆர்பிஐ ஈடுபட்டுள்ளது.