ஓபி அடித்த ஆசிரியைகள்..கண்டித்த தலைமை ஆசிரியருக்கு வேட்டு வைக்க அடிக்கப்பட்ட போஸ்டர்

திண்டுக்கல்லில் வேலை செய்ய வலியுறுத்திய தலைமையாசிரியரின் வேலைக்கு, போஸ்டர் ஒட்டி வேட்டு வைக்க பார்த்த இரண்டு ஆசிரியைகள் போலீசாரின் விசாரணையில் சிக்கி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த எரியோடு பகுதியில் உள்ள, அரசு உயர்நிலைப் பள்ளியில் தங்கவேல் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அப்பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற தங்கவேல், மாணவர்களின் நலனிற்காகவும், பள்ளியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த அரசு பள்ளியில் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

இதே பள்ளியில் ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகை என்றும் 2 ஆசிரியைகள் கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சரிவர பணியாற்றவில்லை எனவும், கடமைக்கு என பள்ளிக்கு வந்து ஊதியத்தை பெற்று செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால், பள்ளியில் வெட்டியாக பணியாற்றி வந்த ஆசிரியர்கள், ஆசிரியைகளையும் கண்டித்துள்ளார்.

தலைமையாசிரியரின் கண்டிப்பு நீண்ட காலமாக பணியாற்றாமல் ஓபி அடித்துக் கொண்டு சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் தங்கவேலுவை பிரச்னையில் சிக்க வைக்கும் நோக்கில், அரசு பள்ளியில் சேரும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக 260 ரூபாயம், ஒன்பதாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு 310 ரூபாயும், பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 600 ரூபாயம் கட்டணமாக தலைமை ஆசிரியர் வசூல் செய்து வருவதாகவும், இதனை மாணவர்கள் பெற்றோர்கள் நலக்கூட்டமைப்பில் இருந்து கண்டிப்பதாகவும் போஸ்டர் அடித்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டர்களை கண்ட மாணவர்கள் பெற்றோர்கள் நலக் கூட்டமைப்பு சங்கத்தினர், தங்களின் சங்கம் சார்பாக எந்த விதமான போஸ்டரும் ஒட்டப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்து எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், போஸ்டர் அடித்து ஒட்டியது ஞானாம்பாள் மற்றும் ஞானாம்பிகை என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

Exit mobile version