வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..!

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குவதாக என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியை சந்தித்ததையடுத்து இந்த போராட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி பணிகள் முற்றிலும் முடங்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்குத் திமுக முழு ஆதரவு வழங்குகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் ‘வங்கிகள் சட்டத் திருத்த மசோதா’ கொண்டு வரும் பாஜக அரசின் செயலைக் கண்டித்து இரு நாட்களில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் செய்யும் வேலை நிறுத்தப் போராட்டத்தின் நியாயங்களை, வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கழகத் தலைவர் அவர்களைச் சந்தித்து எடுத்துக்கூறியதைக் கருத்தில்கொண்டு திமுக தனது முழு ஆதரவினை வழங்குகிறது.

கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் – பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் முனைப்பு காட்டுவதில்லை.

வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட பாஜக அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும். இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version