கரும்பு லாரிக்காக சாலையோரத்திலேயே காத்திருக்கும் யானைகள்

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிய நிலையில், கரும்புகளை தூக்கிக்கொண்டு அந்த யானை காட்டுக்குள் ஓட்டம் பிடித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. கர்நாடகத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்புகளை ஏற்றி வரும் லாரிகள், கரும்புத் துண்டுகளை சாலையில் வீசியெறிவதால் அதனை விரும்பி உண்ணும் காட்டு யானைகள், தினந்தோறும் கரும்பு லாரியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

இந்நிலையில், காராப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சாம்ராஜ்நகரில் இருந்து வந்த கரும்பு லாரியை குட்டியுடன் வழிமறித்த காட்டுயானை லாரியை போகவிடாமல் தடுத்து தனது துதிக்கையால் கரும்பை பிடுங்கி குட்டிக்கு போட்டது. இதையடுத்து குட்டியானையும் கரும்பை தின்றபடி நகராமல் அங்கேயே நின்றது. தாய் யானையும் நகராமல் அதே இடத்தில் நின்று லாரியில் இருந்து கரும்பு பிடுக்கி தின்றபடி இருந்தது.

இந்நிலையில், யானையின் நடவடிக்கையால் அவ்வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தமிழகம் கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வன ஊழியர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கரும்புக் கட்டுகளை தும்பிக்கையில் எடுத்துக் கொண்டு யானை குட்டியை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றது.

கரும்புக்காக யானைகள் சாலையில் முகாமிடுவதால் மைசூர் ஆசனூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

Exit mobile version