விவசாய மசோதாக்களை ஆதரிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்

தலைநகர் டெல்லியில், மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இதுவரை, மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. கொரனா காலத்திலும், கடும் குளிரைக் கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், வெளிநாட்டினர் பலரும் விவசாயிகளுக்கு ஆதராவாக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மற்றும் சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் ஆகியோர் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதற்கு, மத்திய வெளியுறவுத் துறை அறிக்கை மூலம் பதிலளித்தது. அந்த அறிக்கையில், ”நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பிறகுதான் வேளாண் துறை சீர்திருத்தம் தொடர்பான 3 புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பை வழங்குவதுடன், அவர்களுடைய வருமானத்தை அதிகரிக்க வகை செய்கின்றன. இந்நிலையில், இந்த சட்டங்கள் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் சிலர் குறை கூறியிருப்பது துரதிருஷ்டவசமானது.

எனவே, இதுபோன்ற விவகாரத்தில் கருத்து கூறுவதற்கு முன்பு அது தொடர்பான உண்மை நிலவரத்தை ஆராய வேண்டும். முக்கிய பிரபலங்களும் மற்றவர்களும் சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகள் சில நேரங்களில் துல்லியமானதாகவும் பொறுப்பானதாகவும் இருப்பதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வெளிநாட்டினரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியா ஜனநாயக நாடு; நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்; ஜனநாயக முறைப்படி, எங்கள் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா, ரஹானே உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள்.

Exit mobile version