திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக கோழிப்பண்ணை ஒன்று உள்ளது.
அந்த பண்ணையில் பிராய்லர் கோழி, நாட்டுக் கோழி, காடை ஆகியவற்றை விற்பனைக்காக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோழிப்பண்ணை கொட்டகையில் மார்ச் 12-ஆம் தேதியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதனை கண்ட அருகிலிருந்த தொழிலாளர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.
இதையடுத்து சின்னாளம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கோழிப்பண்ணையில் எரிந்து கொண்டிருந்த தீயை சில மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் கோழிப்பண்ணை முழுவதுமாக எரிந்து நாசமாகியது.
அங்கு வளர்க்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி சாம்பலானது. ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் நாசமானது என்று கூறப்படுகிறது.
இது தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.