பட்டாசு வெடித்து நடுசாலையில் உடல் சிதறி உயிரிழந்த தந்தை, மகன்… நேரில் கண்டவர்களின் அதிர்ச்சி சாட்சி!!

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன்(32). இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பார்ப்பதற்காகச் சென்றுவிட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடன் இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு தனது சொந்த ஊரான புதுச்சேரி நோக்கி வந்தார். அவற்றில் நாட்டு வெடிகளும் அடக்கம்.

அப்போது புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரைச் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக, இரண்டு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட நாட்டுப் பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர். அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூரைகள் சேதமடைந்து அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த சாலையில் அடுத்த இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர்களை ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் இரு மாநில எல்லைகளில் நடந்ததால் இரு மாநில போலீசாரும் சம்பவ இடத்திற்குச் சென்று வெடி விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.ஸ்ரீநாதா வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Exit mobile version