போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்திய ஓணக்காரர்கள் பட்டியலில், தொடர்ந்து 13வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார்.
போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி வெளியாகியுள்ள நடப்ப்பாண்டிற்கான பட்டியலில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் நடப்பாண்டில் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை குவித்து, கடனில்லா நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதைதொடரத்து, ரிலையன்சின் சில்லறை வர்த்தக நிறுவனத்திலும், பன்னாட்டு நிறுவனங்களால் கடந்த 4 வாரங்களில் மட்டும் சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதன் மூலம், முகேஷ் அம்பானியின் வளர்ச்சி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், இரண்டாம் இடத்தில் கவுதம் அதானி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது. மூன்றாம் இடத்தில் ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடார், 4வது இடத்தில் அவன்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவன உரிமையாளர் ராதாகிஷண் தமானி, 5வது இடத்தில் அசோக் லேலாண்ட்டின் இந்துஜா சகோதரர்கள் உள்ளனர். 6 முதல் 10 இடங்கள் முறையே, சீரம் இந்தியா அதிபர் சைரஸ் பூனாவல்லா, பல்லோன்ஜி மிஸ்திரி, உதய் கோடக், கோத்ரெஜ் குடும்பம், லட்சுமி மிட்டல் ஆகியோர் உள்ளனர்.