இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக திருப்பதியில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.
திருப்பதியில் உள்ள சீனிவாச கட்டிட வளாகத்தில் ஏழுமலையானை இலவசமாக தரிசிப்பதற்கு தேவையான டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 8000 எண்ணிக்கையில் மட்டுமே இலவச டோக்கன் வழங்கப்படும் நிலையில் அவற்றை வாங்கி ஏழுமலையானை வழிபடுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர்.
நாளை ஏழுமலையானை தரிசிப்பதற்கான டோக்கன்களை வாங்க இன்றே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவித்தனர். இதனால் அதிகாலை 4 மணிக்கு திறக்க வேண்டிய டிக்கெட் கவுண்டர் இரவு 10 மணிக்கே திறக்கப்பட்டு டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிலையில் கவுண்ட்டர்கள் திறக்கப்பட ஒரே மணி நேரத்தில் நாளைய தினத்திற்கான டோக்கன்கள் தீர்ந்துவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பக்தர்கள் தங்களுக்கும் இலவச தரிசன டோக்கன்களை வழங்க வேண்டும் என்று அங்கு பணியிலிருக்கும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நிலைமையை உணர்ந்த தேவஸ்தான நிர்வாகம் நாளை மறுநாள் இருபத்தி மூன்றாம் தேதி சாமி தரிசனம் செய்வதற்கான எட்டாயிரம் டோக்கன்கங்களையும் இன்றே விடுவித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறது. ஆனாலும் இன்னும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்குகிறோம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திருப்பதிக்கு வர தேவஸ்தானம் வழிவகை செய்து விட்டது. இதனால் திருப்பதியில் கொரோனா தொற்று வேகமாக பரவும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.