20 திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் கரூரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்.
கரூர் அருகே உள்ள நாகம்பள்ளி பெட்ரோல் நிலையத்தில், பள்ளி மாணவர்கள் 10 திருக்குறள் ஒப்புவித்தால் அரை லிட்டர் பெட்ரோல் இலவசம் எனவும், 20 திருக்குறளை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டது. வள்ளுவர் என்ற பெயரையே கொண்ட அந்த பெட்ரோல் பங்க் கடந்த மாதம் இந்த சலுகையை அறிவித்தது. வரும் ஏப்ரல் மாதம் வரை ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இச்சலுகை வழங்கப்படும்.
இதில், மாணவர்கள் ஒப்புவிக்க விரும்பும் திருக்குறளை எழுத்துப்பூர்வமாக எடுத்து வர வேண்டும், அவர்களுடன் பெற்றோரும் வர வேண்டும். ஒரு போட்டியாளர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஆனால், வேறு வேறு திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும். திருக்குறள் ஒப்புவித்தால் சலுகை என்ற அறிவிப்புக்கு பின்னால் இருப்பவர் பெட்ரோல் பங்கின் உரிமையாளர் செங்குட்டுவன். இவர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவரும் கூட. மாணவர்கள் திருக்குறளை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சலுகையை அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறுகையில், “மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவதால் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இச்சலுகையை அறிவித்தோம். அதோடு, மாணவர்கள் திருக்குறளின் நற்பண்புகளுடன் வளர வேண்டும் என விரும்பினேன். ஆனால், அதற்காக சில ஊக்கங்களை அவர்களுக்கு தர வேண்டி இருந்ததால் இந்த சலுகையை முன்வைத்தேன்” என்றார்.
செங்குட்டுவனின் தந்தை கருப்பையா 1960 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட தன்னுடைய கடைக்கு வள்ளுவர் என பெயரிட்டு நடத்தி வந்துள்ளார். இப்போதும் பரமத்தி வேலூரில் அந்த கடையை தனது சகோதரர் நடத்தி வருவதாகவும், தங்களது குடும்பத்தினருக்கு திருக்குறள் மீது அளவில்லா காதல் இருப்பதாகவும் செங்குட்டுவன் கூறினார். 147 மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்கும் வாய்ப்பினை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். பெட்ரோல் விலை 90 க்கு விற்றாலும் அதைப் பற்றி கவலைப்படவில்லை எனத் தெரிவித்ததோடு, மாணவர்கள் திருக்குறளை கற்பிக்கவே விரும்புவதாகவும் கூறினார்.
– ரம்யா