இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும், 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும், நேற்று மட்டும், கொரோனாவால் 1,045 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவும் வேகம் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிற நிலையில், இதுவரை உலகெங்கிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 1.71 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தக் கொடிய நோய் தொற்றிற்கு, இதுவரையிலும் 8.66 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
உலகிலேயே மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 62.90 லட்சம் பேரும், பிரேசிலில் 40 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவில், 38.48 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா
இந்தியாவில், இதுவரை 29.67 லட்சம் பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு, நேற்று ஒரே நாளில் மட்டும் 83,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 1,045 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவத் துவங்கியதில் இருந்து, இந்தியா மிக அதிகபட்சமான பாதிப்பை நேற்று பதிவு செய்துள்ளது, மிகவும் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இதுபோல 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளானது, இது மூன்றாவது முறையாகும்.
மேலும், ஒரு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையில், சமீப நாட்களாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது, இந்தியா. உயிரிழப்பு மற்றும் மொத்த பாதிப்பில், தொடர்ந்து 3-வது இடத்தில் இந்தியா நீடிப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.