சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “டாஸ்மாக்கில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம், 25,009 பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக 2021 ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஆண்டு தோறும் 15 கோடி ரூபாய் செலவாகும்” என்று அறிவித்தார்.
அந்த வகையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தற்காலிக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250 ஆகவும், கடை மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.12,750-ல் இருந்து ரூ.13,250 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.10,600-ல் இருந்து ரூ.11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.9,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும் அதிகரித்துள்ளது.