டெல்லியில் இன்று ஆளுநர்கள் மாநாடு நடைபெறுகிறது; தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
டெல்லி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விவகாரங்கள், அரசுத் திட்டங்களுக்கான நிதித் தேவைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல்,கொரோனா பாதிப்பு, தடுப்பூசி இயக்கம் போன்றவை குறித்து ஆலோசிக்க இன்று டெல்லியில் ஆளுநர்கள் மாநாடு நடைபெறுகிறது; குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியரசுத் துணைதலைவர் வேங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அண்மையில், தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்ட பிறகு மாநில ரீதியான செயல்கள் குறித்து ஆளுநர்கள் மாநாட்டில் எடுத்துரைபார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல, தெலங்கான மாநில ஆளுனரும் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும் தமிழிசை சௌந்தரராஜன், மணிப்பூர் மாநில ஆளுநர் இல கணேசன், பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட 28 மாநில ஆளுநர் பங்கேற்க உள்ளனர்.
2020ம் ஆண்டுக்கு பிறகு வீடியோ காண்பிரன்ஸ் மூலம் அனைத்து ஆளுனரும், குடியரசுத்தலைவர் உடனான ஆலோசனையில் பங்கேற்பதை வழக்கமாக வைத்து இருந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு நடைபெறும் முதல் ஆளுநர் மாநாடு என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.