நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான புகாரை முடித்து வைத்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த ஆணையம், ஜெயக்குமாரின் புகாரை முடித்து வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தனது புகார் குறித்து, தன்னை அழைத்து விசாரணை நடத்தாமலேயே மனித உரிமை ஆணையம், அதை முடித்து வைத்ததாக கூறியுள்ளார்.

ஆணைய உறுப்பினராக உள்ள திமுக ஆதரவு நபரால் தனது புகார் நேர்மையாக நடுநிலையுடன் விசாரிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதனால் புகாரை முடித்து வைத்த ஆணைய உத்தரவை ரத்து செய்து, புகார் குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என்.செந்தில் குமார் அமர்வு, இரண்டு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும் படி, மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Exit mobile version