ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை எப்படி நிறைவேற்ற முடியும்? மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கேள்வி

ரேஷனில் அரிசி போடுவதை தடுத்துவிட்ட பிறகு, ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த முடியும்? என்று மத்திய அரசுக்கு புதுவை முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அரிசிக்கு பதில் பணம்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இழப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர் குடும்பத்திற்கும் எனது இரங்கலை தெரிவிக்கின்றேன்.

பண்டிகை காலங்களில் ஏழைகளுக்குத் துணி தருவதற்கு பதிலாகவும், ரேஷனில் அரிசி தருவதற்கு பதிலாக பயனாளிகளுக்குப் பணம் தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தினார். மத்திய உள்துறையும் இதை செய்யச்சொல்கிறது. ஒரே நாடு, ஒரே ரேஷன். ரேஷனில் அரிசி போடுவதை தடுத்து விட்டு, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? ரேஷனி்ல் அரிசி தருவதும், ஏழைகளுக்குப் பண்டிகை காலங்களில் இலவச துணி தருவதும் அரசின் கொள்கை முடிவு. அதை மாற்ற அதிகாரம் இல்லை. அரிசியை ரேஷனில் வழங்குவது தொடர்பான வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது.

பா.ஜ.க. அலுவலகம்
ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸ் என்பது பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது. அதேபோல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version