கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கல்வித்துறை சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: *பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக அவரவர் சார்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் (சிஇஒ) கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- சிஇஒ அனுமதி பெற்ற பிறகே ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
- குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் சிஇஒ அனுமதி இல்லாமல் ஊடகங்களுக்கு தெரிவிக்கக் கூடாது.
- பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், சிஇஒ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- மரத்தடியில் வகுப்புகளை நடத்தக் கூடாது.
- பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு தரமாக இருக்கிறதா? முட்டை நல்ல நிலையில் இருக்கிறதா? என்பதை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
- பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாக பள்ளிக்கு வரவேண்டும்.
- ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக்கூடாது.
- தங்களின் சொந்த வேலைக்காக மாணவர்களை, ஆசிரியர்கள் பள்ளிகளை விட்டு வெளியே அனுப்பக் கூடாது.
- ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-ல் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
- பள்ளிகள், பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பு, மாணவர்களின் பாதுகாப்பை அவர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.