“தமிழிசை என்றும் தமிழிசையாக  தான் இருப்பேன். ஹிந்திசையாக மாறமாட்டேன்”

‘தமிழ் என் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் இருக்கிறது’ என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முரசொலி பத்திரிகையில் தன்னை பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தின் மகளான  நான்  மூக்கையும், வாலையும்  தமிழகத்தில் நுழைய நீட்ட  வேண்டியதில்லை. என் உடல், உயிர்  அனைத்தும் தமிழ் மண்ணிற்கும், தமிழ் மக்களுக்கும் சொந்தமானது .அந்த வகையில் தமிழச்சியான எனக்கு எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு முழு சுதந்திரம் உண்டு.

அதுவும் புதுச்சேரியில் பள்ளி கல்வி திட்டமும், தேர்வும் தமிழகத்தை சார்ந்து இருப்பதால் புதிய கல்விக்கொள்கையின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறுவது என்ன தவறு. ஆளுநர்கள் அரசியலமைப்புக்கு உட்பட்டு கூறும் கருத்துக்களை அரசியலாக்குவதுதான் தவறு. மாணவர்களுக்கு நல்ல கருத்துக்களை விதைக்க வேண்டிய பட்டமளிப்பு விழாக்களை அரசியலாக்குவதுதான் தவறு.

கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் கடந்த காலங்களில்  கருத்தை கருத்தாக எதிர்கொள்ளாமல் அதை மீம்ஸாக எதிர்கொண்டவர்கள் அதை மீண்டும் நினைவுபடுத்தி ரசிப்பது அவர்களுடைய மனநிலையை காட்டுகிறது.மீம்ஸ்களுக்கு அஞ்சுபவள் நான் அல்ல. இங்கே நுழைவுத்தேர்வு  வேண்டாம்  என்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில்  உலகம் முழுவதும் நுழைவுத்தேர்வுகள் உண்டு.ஏன் இங்கேயும் எல்கேஜி வகுப்பில் பிள்ளைகளை சேர்க்க பெற்றோருக்கு நுழைவுத்தேர்வு  வைக்கும் நிலை வந்துவிட்டது . நுழைவு தேர்வே வேண்டாம் என்பதே சமூக நீதியா என்பது தெரியவில்லை. தகுதி வாய்ந்தவர்களை தேர்ந்தெடுக்கவே நுழைவுத்தேர்வு. ஏழை ,எளிய மாணவர்கள் பயன்பெறக்கூடாது என்பதற்காகவே நீங்கள் இந்தி திணிப்பு என்று மக்களை ஏமாற்றுகின்றீர்கள்.

இந்தி மொழி எதிர்ப்பை கூறியே  நீங்கள் தமிழை வளர்ப்பதாக சொல்லி இன்னும் எவ்வளவு காலம்தான் மக்களை ஏமாற்ற முடியும்.தமிழிசை என்றும் தமிழிசையாக  தான் இருப்பேன். இந்தி இசையாக மாறமாட்டேன் என்பதை உறுதியாக கூறுகிறேன். வாரிசுகளை முன்னிறுத்தி குடும்ப ஆட்சி நடத்துபவர்கள் எல்லாம் மக்கள் நலனை முன்னிறுத்தி இணக்கமாக நடக்கும் ஆளுநரை புதுச்சேரியில் நடப்பது கவர்னர் ஆட்சி என்றும் சூப்பர் முதல்வர் என்றும் விமர்சிப்பதுதான் ஆச்சரியம். கருத்தைப் கருத்தால் எதிர் கொள்ளுங்கள் பதில் சொல்கிறேன்” இவ்வாறு பேசினார்.

-பா.ஈ.பரசுராமன்

Exit mobile version