அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆந்திர,கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், கரூர்,நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே,இப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

Exit mobile version