வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் ₹30 ஆயிரம் பயிற்சிக் கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் படித்து முடித்தப்பின் இங்கு இன்டன்ஷிப் பயிற்சி பெற வேண்டும். அதற்கு கட்டணமாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் ₹3.20 லட்சம் வசூல் செய்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை ₹2லட்சம் வசூல் செய்கிறது. ஆக மொத்தம் ₹5.20 லட்சம் செலவாகிறது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதால்தான் குளிரையும் பொருட்படுத்தாமல் வெளிநாடுகளில் தங்கி மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில்₹5 லட்சம் கட்டணம் அதிகமாக இருக்கிறது என பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை பேரில் பயிற்சி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இனி₹30 ஆயிரம் கட்டணம் (பல்கலைக்கழக கட்டணம் ₹3.20 லட்சத்தை குறைத்து ₹30,000; நல்வாழ்வுத்துறை வசூலித்த ₹2 லட்சம் தள்ளுபடி) செலுத்தினால் போதும். அதேபோல், வெளிநாட்டில் படித்துவரும் மாணவர்களில் 7.5% பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்பட்டது. இப்போது, அதையும் தேசிய மருத்துவ கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்று 20% ஆக உயர்த்தியுள்ளோம் என்று கூறினார்.
-பா.ஈ.பரசுராமன்.