பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க சொல்லி பிஎஸ்என்எல் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்த கொத்தனாரை போலீசார் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார்(39) கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வடிவு (37) இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செந்தில்குமார் குடித்துவிட்டு வந்து மனைவி வடிவு மீது சந்தேகப்பட்டு அடித்து தாக்கி உள்ளார். இதனால் கோபமடைந்த வடிவு தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிரிந்து சென்ற மனைவி வடிவுவை சேர்ந்து வாழ அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்துள்ளார். இதனால், இன்று அதிகாலை திருவொற்றியூர் அஜாஸ் பேருந்து நிலையம் அருகே உள்ள BSNL அலுவலகத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த 100 அடி உயரம் உள்ள BSNL செல்போன் டவர் மீது ஏறி குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து உடனடியாக திருவொற்றியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செல்போன் கோபுரத்தில் நின்று தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்த செந்தில்குமாரிடம் பேச்சு கொடுத்து மனைவியுடன் சேர்த்து வைப்பதாக சொல்லி கீழே இறங்கி வரும்படி கூறஇதனையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கிய செந்தில் குமாரை போலீசார் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் சுமார் அரைமணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.