ஆவின் பால்பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவின் பால்பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரம் அச்சிடப்பட்ட பாலீதின் கவர் கொள்முதல் செய்ய டெண்டர் விடாமலும், ஏற்கனவே பாலிதீன் கவர் கொள்முதல் செய்துவரும் நிறுவனத்தில் கொள்முதல் செய்யாமலும், கொள்முதல் செய்து வரும் விலையை விட ஒரு கிலோவிற்கு ₹30 அதிக விலை கொடுத்து ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் செய்ய ஆர்டர் கொடுத்த வகையில் ₹1கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆவின் ½ லிட்டர் பால் பாக்கெட்டில் 430 கிராம்தான் இருந்தது என்ற குற்றச்சாட்டு அடங்குவதற்குள் இந்த குற்றச்சாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆவின் பால்பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தை அச்சிட டெண்டர் விடாமல் ஆர்டர் கொடுக்க ஆவின் அதிகாரிகளை தூண்டியது யார்? மொத்தம் எத்தனை டன் பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டது? இதனால் ஆவினுக்கு எத்தனை ரூபாய் இழப்பு ஏற்பட்டது? இது தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோசடி செய்த அதிகாரிகளிடம் இருந்து பணத்தை வசூல் செய்து ஆவின் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.