வாட்ஸ் அப் 3 புதிய அப்டேட்டுகளை அறிவித்துள்ளது.
குழு உரையாடலில் அனைவருக்கும் தெரிவிக்காமல் வெளியேறவும், நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது யார் பார்க்கலாம் என்பதை கட்டுப்படுத்தவும், ஒருமுறை செய்திகளை பார்க்கும்போது ஸ்கிரீன்ஷாட்டுகளை தடுக்கும் வகையிலும் 3 புதிய அம்சங்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உங்கள் செய்திகளை பாதுகாக்க புதிய வழிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டே இருப்போம். அவற்றை தனிப்பட்ட தகவல்களாகவும், நேருக்கு நேர் உரையாடல்களை பாதுகாப்பாகவும் வைத்திருப்போம் என்று மெட்டாவின் நிறுவனரும், பேஸ்புக், வாட்ஸ் அப் சிஇஓவுமான மார்க் ஸக்கர்பெர்க் கூறியுள்ளார்.
- அமைதியாக வெளியேறும் வசதி: யாருக்கும் தெரியாமல் குழுவில் இருந்து வெளியேற அனுமதிக்கும். ஒருவர் குழுவில் இருந்து வெளியேற விரும்பும்போது அட்மின்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். இந்த புதிய அம்சம் இந்தமாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
- ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வசதி: இந்த வசதியின் மூலம் ஆன்லைனில் இருக்கும்போது யார் பார்க்கலாம்? யார் பார்க்கக் கூடாது என்பதை பயனர்கள் தீர்மானிக்க முடியும். இந்த அம்சமும் இந்த மாதம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
- ஒருமுறை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் வசதி: செய்திகளை ஒருமுறை பார்க்கவும், நிரந்தர டிஜிட்டல் பதிவு இல்லாமல் அனுப்பப்படும் புகைப்படங்கள் அல்லது வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மற்றவர்களுக்கு பகிர்வதை தடுக்கவும் இந்த வசதி உதவும். இது விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.