மாணவர்களின் விளையாட்டு திறனை கண்டறிய உதவும் வகையில் WBTST செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடற்தகுதி எப்படி இருக்கிறது?அவர்கள் எந்த விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர்? அந்த விளையாட்டிற்கான பயிற்சியை எப்படி வழங்குவது? பின் அதுசார்ந்த போட்டிகளில் எவ்வாறு பங்கெடுக்க வைப்பது? போன்ற பல்வேறு தகவல்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பதிவேடுகளில் மட்டுமே குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நடைமுறையை மாற்றி EMIS இணையதளத்துடன் இணைந்து செயல்படும் வகையில் world Beater Talent Spotting Test என்ற புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் மாணவர்களின் விவரங்களை தினத்தோறும் அப்டேட் செய்வதன் மூலம் DEOs, CEOs முறையாக கண்காணித்து, தகுதியான மாணவர்களை அடையாளம் கண்டு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT)மூலம் தொடர் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக WBTST செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் (CEOs) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (DEOs)க்கு இன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை பள்ளிப்பருவத்தில் இருந்து கண்டறிய முடியும் என்றும், இனிமேல் வேலை செய்யாத உடற்கல்வி ஆசிரியர்களை கண்டுபிடிக்க முடியும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.