திமுக ஆட்சி உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் துணைவேந்தர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சியை உயர்கல்வியின் பொற்காலமாக மாற்ற வேண்டும் என துணைவேந்தர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இயங்கும் 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் & உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கிவைத்தார்.

அப்போது, நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நாட்டின் சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் 19 பல்கலைக்கழகங்கள் உருவாகியுள்ளன. திமுக ஆட்சிகாலத்தில் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியை உயர்கல்வியின் பொற்காலமாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாற்ற வேண்டும். தமிழகத்தில் கல்வித்துறையில் நாம் மேலும் உயர்ந்து நிற்க வேண்டும். கல்விதரம் உயர்வதுடன் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும்.இதற்காக ₹50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அது மாநில உரிமை. நீட் தேர்வு மட்டுமின்றி புதிய தேசிய கல்விக்கொள்கையையும் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version