திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பசியில் வாடும் குரங்குகள் காய்கறி வாகனங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தால் அங்கு இருக்கின்ற மரங்களில் காய்கள் மற்றும் பழங்கள் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகின்றது.
இதனால் உணவு கிடைக்காமல் பசியில் சுற்றி திரியும் குரங்குகள் சாலையில் வரும் வாகனங்களை எதிர்நோக்கி உணவுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் காய்கறி மற்றும் பழங்களை கர்நாடக மாநிலத்தில் இருந்து ஏற்றிக் கொண்டு திம்பம் மலைப்பாதை வழியாக பல்வேறு லாரி மற்றும் வேன் போன்ற வாகனங்கள் செல்கின்றன.
அந்த வாகன டிரைவர்கள் குரங்குகளுக்காக காய்கறிகளை ரோட்டில் வீசி செல்கின்றனர். இதனையடுத்து அந்த காய்கறிகளை தின்று பசியை போக்கும் குரங்குகள் சில சமயங்களில் ரோட்டில் அங்கும் இங்கும் ஓடும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஆனாலும் தங்களது பசியினை போக்கிக் கொள்வதற்காக அவ்வழியாக ஏதேனும் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வாகனம் வருகின்றதா? என்று பசியோடு குரங்குகள் காத்து கொண்டிருக்கின்றன.