கேரளாவில் வரதட்சணை கொடுமையின் ஒரு அங்கமாக பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொன்ற கணவன் சூரஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த உத்ரா என்பவருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. உத்ராவிற்கு காலில் சிறிது ஊனம் இருந்ததால் அவருக்கு உத்ராவின் பெற்றோர் வரதட்சணையாக கார், நகைகள் என அதிகளவில் கொடுத்துள்ளனர். ஆனால், மேலும் வரதட்சணை வழங்க வேண்டும் என கோரி திருமணத்திற்கு பின் சூரஜ், உத்ராவை சித்திரவதை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
வரதட்சணை மேலும் வேண்டும் என வெறி கொண்ட சூரஜ் ஒரு கட்டத்தில் அவரது மனைவியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். எனவே, 10,000 ரூபாய்க்கு கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்றை வாடகைக்கு வாங்கியுள்ளார். அதன்பின் அவரது மனைவி கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி அவரது படுக்கை அறையில் படுத்து இருந்தபோது பாம்பை படுக்கை அறைக்கு அனுப்பி கடிக்க வைத்துள்ளார். இதனால் கதறித் துடித்த உத்ராவை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி உத்ரா உயிரிழந்துள்ளார். சித்ரா இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் தனது படுக்கையறைக்குள் பாம்பு வந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பாம்பு படுக்கையறைக்கு வருவது குறித்து சந்தேகமடைந்த உத்ராவின் பெற்றோர்கள் உத்ராவின் கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அப்போது ஏற்கனவே ஒரு முறை இதுபோன்று தனது மனைவியை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், ஆனால் அதிலிருந்து தப்பி விட்டதால், மீண்டும் அதே பாணியில் பாம்பை அனுப்பி கொலை செய்ததை சூரஜ் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனை அடுத்து இது குறித்த வழக்கு கேரள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தற்போது கேரள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி உத்ராவை கொலை செய்ய பாம்பை பயன்படுத்திய கணவர் சூரஜ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது.
தன் மனைவியின் சொத்துக்களை அபகரிப்பதற்காக மிகக் கொடூரமான முறையில் நடந்துகொண்டு மனசாட்சி சிறிதும் இன்றி கொலை செய்த குற்றத்திற்காகச் கடுமையான தண்டனை சூரஜிற்கு விதிக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.