நான் பதவிகளுக்காக தி.மு.க.விற்கு வந்தவன் அல்ல என்று துரைமுருகன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கவில்லை என்ற ஏக்கத்தில் தி.மு.க.வுக்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவதுபோல், ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன். அண்ணாவின் ‘திராவிட நாடு’ கொள்கையைப் பார்த்து ஒரு போராளியாக 1953ம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன்.
நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்குக் கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து, இருவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்காக கோஷமிட்டு இருப்பேன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பது அந்த செய்தித்தாளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்த செய்தித்தாளுக்கு ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் தி.மு.க. தொண்டர்கள். இந்தப் பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது என அவர் தெரிவித்துள்ளார்.