விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது புரிகிறது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவருக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் வெகு விமரிசையாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்பு ஹைதராபாத்தில் வசித்து வந்தார் சமந்தா. பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய போவதாக தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அதிகாரப்பூர்வமாக இருவரும் தெரிவித்திருந்தனர். இது இவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் விவாகரத்து முடிவு குறித்து முதல் முறையாக தற்போது சமந்தா பேசியுள்ளார்.
அதில், உங்களுக்கு மோசமான ஒரு நாள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ள தயங்காதீர்கள். அதை புரிந்து கொண்டு உங்கள் கஷ்டங்களை ஏற்றுக் கொண்டு விட்டால் உங்கள் வேலை எளிதாகி விடும். நான் ஆரம்பத்தில் மிகவும் பலவீனமானவள் என்று நினைத்திருந்தேன். மேலும் எனது விவாகரத்து பிரிவால் நான் நொறுங்கி, இறந்துவிடுவேன் என்று கூட நினைத்தேன்.
ஆனால் நான் எவ்வளவு வலிமையானவள் என்பதை இந்த விவாகரத்து தான் எனக்கு புரிய வைத்துள்ளது. இன்று நான் வலிமையாக இருக்கிறேன் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் நான் இவ்வளவு வலிமையானவள் என்பது எனக்கே இதற்கு முன்பு தெரியாமல் இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சமந்தா யசோதா எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சமந்தாவிற்கு ஒரு கம்பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.