இந்திய குத்துச்சண்டை வீராங்கனைக்கு கொரோனா பொசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் 16 இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலி, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட நாடுகளில் 52 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இதற்கான இந்திய அணியினர் நேற்று இத்தாலி நாட்டுக்குப் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக குத்துச்சண்டை அணியினருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையில் உலக சாம்பியன்ஷிப்போட்டியில் 2 முறை வெண்கலப்பதக்கம் வென்றவரும், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவருமான அசாம் மாநிலத்தை சேர்ந்த 23 வயது வீராங்கனையான லவ்லினா போர்கோஹைன் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அவர் இத்தாலி செல்லவில்லை. தனிமைப்படுத்தப்பட்டு உள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர் கொரோனாவிலிருந்து மீண்டு வந்ததும் பயிற்சிக்காக அனுப்பப்படுவார் என்று குத்துச்சண்டை சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.