பாலியல் புகார், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளால் நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸை கொடுத்திருந்தாலும், உலக நாட்டு மக்களின் லுக்கை திரும்பப் பார்க்க வைத்தவர் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. ஆம், கைலாஷா என்ற நாட்டை உருவாக்கி, அதற்கென தனி ரிசர்வ் பேங்க், தனி கரன்சிகள் என அடுத்தடுத்து அதிரடியை காட்டினார்.
இதுவரையில் அவரது கைலாசா நாடு உண்மையில் இருக்கிறதா..? இல்லையா..?, ஒருவேளை இருந்தால், அந்த நாடு எந்தக் கண்டத்தில் இருக்கிறது என்ற கேள்விகள் ஒவ்வொரு மக்களிடமும் எழுந்து வருகிறது. ஆனால், இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு நாளும் கைலாசா பற்றிய அப்டேட் மட்டும் கிடைக்கிறது.
மேலும், டீக்கடை, ஓட்டல் உள்ளிட்ட தொழில்களை கைலாசாவில் தொடங்க அடுத்தடுத்து விண்ணப்பங்களும் குவிந்து கொண்டே செல்கிறது. அண்மையில், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற வேடத்தில் அவதரித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்தியர்கள் யாருக்கும் கைலாசாவில் நுழைய அனுமதியில்லை என்று நித்தியானந்தா அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பியா யூனியன், மலேசியா, பிரேசில் உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகமுள்ள நாட்டு மக்களுக்கும் அனுமதி இல்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். நித்தியானந்தாவின் இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.