பொதுவாக தமிழகத்தில் பெய்யக்கூடிய ஆண்டு மழைப்பொழிவில் அதிகளவிலான மழை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் கிடைக்கின்றது. அந்தவகையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் நேற்றுமுன்தினமும், நேற்றும் மழை வெளுத்து வாங்கி வருகின் றது. நேற்று முன்தினம் அதிக பட்சமாக மயிலாப்பூர் பகுதியில் 18 செ.மீ. மழை பொழிந்தது அதன் தொடர்ச்சியாக இன்றும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் விட்டு விட்டு மழை தொடரும் என்றும் அவ்வப்போது சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.