கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டாச்சு!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கி இருக்கிறது. 166 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பால் உலகிலுள்ள அனைத்து மக்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இன்று இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தடுப்பூசி போடும் பணியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதேபோல, தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  குளித்தலை அரசு மருத்துவமனை,  வாங்கல் மற்றும் உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. இதில் கோவிட் சீல்டு தடுப்பூசி ஒரு நபருக்கு 0.5 மி.லி அளவில்  ஒரு முறையும், நான்கு வாரம் கழித்து ஒரு முறை என இரண்டு முறை தடுப்பூசி அளிக்கப்படும்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 35 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. நாள் ஒன்றுக்கு 100 பேர் வரை தடுப்பு போடுவதற்கு தற்போது தயாராக இருப்பதாக கல்லூரி முதல்வர் வசந்தாமணி தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும்போதும், போட்டுக்கொண்ட பிறகும் அசௌகரியங்களோ, வலியோ ஏற்படவில்லை என்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version