தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர் குருசாமி. மேலும் அவர், இளையரசனேந்தலில் ’ஸ்ரீ முத்தையா கிளினிக்’ என்ற பெயரிலும் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார்.
அதே மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றும் தூய்மைப் பணியாளர் ஒருவருடன் பணி நேரத்தின் போதே அடிக்கடி நெருக்கமாக இருந்து வருவதாகவும், அந்த நேரத்தில் சிகிச்சைக்காக வரக்கூடிய நோயாளிகள் அறைக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அங்கு ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வரும் நீலவேணி என்பவரை வாசலுக்கு வெளியில் பாதுகாப்புக்கு நிற்க வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் மருத்துவர், அங்கு பணிபுரியும் இளம்பெண் ஒருவருடன் மருத்துவமனையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது தொடர்பாக கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் நீலவேணி, மருத்துவர் குருசாமியின் அத்துமீறலை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், ”இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் குருசாமி, தற்காலிகப் பணியாளராக பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளருடன் நெருக்கமாக இருப்பதை நான் பார்த்துவிட்டதால் தன்னை பழிவாங்கும் விதமாக தினமும் இருவரும் அறைக்குள் சென்றதும், அறைக்குள் யாரும் செல்லாமல் இருக்கும் வகையில் தன்னை பாதுகாவலுக்கு நிறுத்தி வைத்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார்.
அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை நான் செல்போனில் எடுத்துவிட்டேன் எனக் கூறி எனது செல்போனையும் அபகரித்து வைத்ததுடன் தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டுகிறார்” எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார், மருத்துவர் குருசாமி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.