கடந்த 2019ம் ஆண்டு தீபாவளிக்கு தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்திற்கு போட்டியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது.
இப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு இரவில் முன்னாள் கைதியான கார்த்தி, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரிகளை எப்படி காப்பாற்றினார் என்பதையும்,போலிசால் பிடிக்கப்பட்ட போதை மருந்துகளை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போக வரும் வில்லன் கும்பல் பற்றியும், ஒரு கான்ஸ்டபிள் 5 கல்லூரி மாணவர்களை வைத்து அந்த இரவை எப்படி கடக்கிறார்கள் என்பதையும், அனாதைகள் விடுதியில் தங்கி இருக்கும் பெண் குழந்தையை பார்க்க வரும் கைதி கார்த்தி பற்றியும், படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
இந்த திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சாம் சி எஸ் இசையில் சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்து இருந்தார். பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றினார்.
இந்நிலையில் ஜப்பானிய மொழியில் கைதி திரைப்படம் ‘கைதி டில்லி’ என்ற பெயரில், வரும் நவம்பர் 19, 2021 அன்று ஜப்பானில் திரையிடப்படவுள்ளது.
ஹிரோஷிமா நகரில் உள்ள திரையரங்கில் இதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.