ஜாலியா ஒரு ரைடு! இந்தியாவை காரிலேயே சுற்றி வரும் கேரள தம்பதியினர்!

கொரோனா பரவலுக்கு அஞ்சி பலரும் முடங்கி போயிருக்கும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், கேரள தம்பதியினர் இந்தியா முழுவதும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தங்கள் காரிலேயே சுற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தம்பதிகள் ஹரி கிருஷ்ணா மற்றும் லட்சுமி கிருஷ்ணா. இவர்கள் கொரோனா பரவலுக்கு முன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். ஆனால் கொரோனா ஊரடங்கால் அவர்கள் திட்டம் கானல் நீரானது. விமானம் ரத்து செய்யப்பட்டதால், பைக்கில் தாய்லாந்து பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். மேலும், நாடு முழுவதும் பஸ், ரயிலில் சுற்றி வரவும் திட்டமிட்டனர்.

திடீரென ஐடியா உதிக்க, தங்கள் காரிலேயே இந்தியா முழுவதும் சுற்றி வர முடிவு செய்து அதற்கு ஆயத்தமாகினர். முதற்கட்டமாக இருவரும் தங்கள் பார்த்து வந்த வேலையான, சேல்ஸ் மேனேஜர் மற்றும் கிராபிக் டிசைனர் பணியை ராஜினாமா செய்திருக்கின்றனர். தங்களது ஹூண்டாய் கிரேட்டா காரில், கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி, நாடு முழுவதும் சுற்றி வர துவங்கினர். தற்போது 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக அவர்கள் பயணித்திருக்கின்றனர். இதுகுறித்து தங்கள் யூடியூப் சேனலான ‘டின்பின் ஸ்டோரிஸ்’ல் தங்களின் பயண அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஹரி கிருஷ்ணா கூறுகையில், ‘எங்கள் பயணத்துக்கு இடையே காரிலேயே ஓய்வு எடுத்து கொள்கிறோம். பெட்ரோல் பங்க்களில் குளித்து கொள்வோம். உணவை நாங்களே சமைக்கிறோம். 60 நாட்கள் பயணம் செய்ய திட்டமிட்டு, 130 நாட்களை கடந்து பயணம் தொடர்கிறது. இம்மாதத்தில் ஊர் திரும்ப திட்டமிட்டிருக்கிறோம். பயணத்துக்காக ரூ.2.50 லட்சம் பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால் அதைவிட கம்மியாக தான் செலவாகி உள்ளது’ என்றார்.

Exit mobile version