கேரளாவில் கல்லூரி வளாகத்திற்குள் காதலியை கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரத்தில் பெண்களைக் கொலை செய்யும் போக்கு தொடர் கதையாக இருந்துவருகிறது. இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பிற்கு இதுபோன்ற சம்பவங்கள் ஊறு விளைவிக்கின்றன.
கேரளா மாநிலம் கோட்டயத்திலுள்ள தாமஸ் கல்லூரி வளாகத்தில் வைத்து 22 வயது பெண்ணும் அவருடைய சக மாணவரும் காதலருமான இளைஞரும் பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது, இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் அந்த இளைஞர் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அதனால், அதிகளவில் ரத்தம் வெளியேறி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த உயிரிழந்தநிலையிலும் அந்த இளைஞர் அங்கிருந்து ஓடவில்லை. காவல்துறை வந்து அவரைக் கைது செய்யும் வரையில் அங்கேயே அமைதியாக அமர்ந்திருந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டச் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. 2018-ம் ஆண்டு சென்னை கே.கே.நகர் பகுதியிலுள்ள மீனாட்சி கல்லூரியில் படித்தவந்த அஸ்வினி என்ற மாணவியை காதல் விவகாரத்தில் இளைஞர் குத்திக் கொலை செய்தார். அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஸ்வேதாவை அவரை காதலித்து வந்த ராமச்சந்திரன் என்ற மாணவர் குத்திக்கொலை செய்துகொண்டு தானும் தற்கொலை செய்ய முயன்றது குறிப்பிடத்தக்கது.