என்ன பா.ஜ.க.வில் இணையப் போகிறேனா? நடிகை குஷ்பு விளக்கம்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தது ஏன்? என்று நடிகை குஷ்பு டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

நான் பா.ஜ.க.வுக்குச் செல்லவில்லை. என் கட்சியின் கருத்துக்கு மாற்றுக் கருத்து என்னிடம் இருக்கலாம். ஏனெனில் நான் ஒரு தனிநபர் எனக்கான தனித்த சிந்தனை உள்ளது. புதியக் கல்விக் கொள்கை சில இடங்களில் தவறாகவே உள்ளது. ஆனாலும் இந்த மாற்றத்தை நேர்மறையாகப் பார்க்க முடியும் என்பதாகவே நான் உணர்கிறேன்.

இதன் நேர்மறை அம்சங்களைப் பார்க்கவே விரும்புகிறேன். எதிர்மறை அம்சங்களை மெதுவே படித்துப் பார்த்து பிறகு அறுதியிடுவோம். நாம் பிரச்சினைகளுக்குத் தீர்வு அளிக்க வேண்டுமே தவிர வெறுமனே குரல்களை எழுப்பிப் பயனில்லை. எதிர்க்கட்சி என்பதும் கூட நாட்டின் எதிர்காலத்துக்கு உழைப்பவர்கள் தாம்.

அரசியல் என்பது சத்தம் எழுப்புவது மட்டுமல்ல, அது இணைந்து பணியாற்றுவதுமாகும். பா.ஜ.க.வும், பிரதமரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளாக நாங்கள் புதியக் கல்விக் கொள்கையை விரிவாக ஆராய்ந்து தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம்.

புதிய கல்விக் கொள்கை 2020 குறித்து என்னுடைய நிலைப்பாடு என் கட்சியின் நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டதுதான். இதற்காக ராகுல் காந்தியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நான் தலையாட்டும் பொம்மையாக, ரோபோவாக இல்லாமல் உண்மையைப் பேசுகிறேன். 

அனைத்தும் தலைவரின் கருத்துக்கு உடன்படுவதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் வேறு, மாற்றுக் கருத்துகளையும் கொண்டிருக்கலாமே. நான் ஜனநாயகத்தை மிகவும் நம்புகிறேன். கருத்து மாறுபாடுகள், மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது நல்லதுதான் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

Exit mobile version