காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று டெல்லியில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

நடிகையாக இருந்த குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். அதன்பின் தி.மு.க.வில் இருந்து விலகி, கடந்த 2014-ஆம் ஆண்டு காங்கிரஸ்-ல் இணைந்தார் குஷ்பு. அவருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி அளிக்கப்பட்டது.
ஆனால், அவர் சமீப காலமாக காங்கிரஸ்-ல் சில நிர்வாகிகளுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.மேலும், மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையையும் பாராட்டி இருந்தார். இதனால் கட்சியும், கட்சி தொண்டர்களும் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர்.
இந்நிலையில் அவர் பா.ஜ.க-வில் சேரவுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து குஷ்புவை நீக்குவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் “கட்சிக்காக உண்மையாக உழைக்க விரும்பிய என்னை போன்றவர்களை சிலர் ஒதுக்குவதாகவும், மூத்த தலைவர்கள் என்னை புறக்கணிக்கின்றனர் என்றும், எனவே காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதகாகவும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பா.ஜ.க.வில் சேர்வதற்காக டில்லியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் சென்றார். அங்கு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசிய அவர், டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது பா.ஜ.க. தமிழகத் தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.
பா.ஜ.க.வில் இணைந்தப் பின்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த குஷ்பு, பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார். பா.ஜ.க.வில் இணைவது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு என்றும், எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளுங்கட்சியை விமர்சிப்பது இயல்பு, கட்சியில் இருக்கும் வரை அவர்களுக்கு சாதகமாக பேசுவது கடமை என்றும் ஒரு கேள்விக்குப் பதிலளித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவர் தேவை எனும் புரிதலுக்கு நான் வந்துள்ளேன். இந்தியாவில் பல கோடிப் பேர் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பா.ஜ.க.வில் உள்ள தொண்டர்களை போலவே நானும் கட்சிக்காக பாடுபடுவேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.