கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சயான்!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை துவங்கவுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரில் நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான் மற்றும் சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராதில்லை. விசாரணையை முழுவதுமாக முடிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும், கோடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை குறித்தும் தகவல்கள் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தனிப்படை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ், விசாரணை அதிகாரி வேல்முருகன் ஆகியோர் நீதிமன்றம் வந்துள்ளனர். இதுபோன்று அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜஹான், கனகராஜ் உள்ளிட்டோரும் நீதிமன்றம் வந்துள்ளனர்.

Exit mobile version