
கரும்பு வயலில் கண்டெடுக்கப்பட்ட இரு சிறுத்தை குட்டிகள், மீண்டும் தன் தாயுடன் மீண்டும் இணைந்தன. புனேயில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புனே நகரின் ஜூன்னார் தெஹ்ஸில் உள்ள ஓசார் கிராமத்தில் உள்ள கரும்பு வயல் ஒன்றில் இருந்து ஒரு ஜோடி ஆண் சிறுத்தை குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கரும்பு அறுவடையில் ஈடுபட்ட விவசாயிகள் சிறுத்தை குட்டிகளை கண்டு, உடனடியாக வனவிலங்கு அமைப்புக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த, இலாப நோக்கற்ற வனவிலங்கு எஸ்.ஓ.எஸ்ஸின் கால்நடை மருத்துவர் டாக்டர் நிகில் பங்கர் மற்றும் உண்ணி ஆகியோர் சிறுத்தை குட்டிகளை மீட்டு, முழுமையாக பரிசோதனை செய்தனர். இதில் அந்த குட்டிகளுக்கு காயம் ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சிறுத்தை குட்டிகளை ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, தளர்வாக மூடி போட்டு மூடி, குட்டிகள் கைபற்றப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டது. குட்டிகளை தேடி வந்த தாய் சிறுத்தை, பிளாஸ்டிக் டப்பாவை திறக்க முயற்சித்து முடியாததால், பின் கீழே தள்ளி அதனை திறந்தது.
பின் பாசத்துடன் குட்டிகளை வாயில் கவ்வி சென்றது. இதனை வீடியோவாக பதிவு செய்ததுடன், பாதுகாப்பான இடத்திலிருந்து டாக்டர்கள் குழு கண்காணித்திருக்கிறது. வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த எஸ்.ஓ.எஸ் அமைப்பு பகிர அது வைரலானது.
இதுகுறித்து டாக்டர் நிகில் கூறுகையில், ‘‘குட்டியை இழந்த தாய் சிறுத்தை ஆக்ரோஷமாக தேடி வரும். ஒருவேளை குட்டிகள் காணாமல் போயிருந்தால், மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கும். பெண் சிறுத்தைகளின் இயல்பான குணம் அது’’ என தெரிவித்தார்.