சிவில், மெக்கானிக்கல், புரொடக்க்ஷன் பொறியியல் துறைக்கு ஆட்கள் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் இருந்து எங்களை அணுகி துறை சார்ந்த பொறியியல் வல்லுனர்கள் தேவை இருக்கிறது என்று சொல்கிறார்கள் என ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
“ஒய்டி ஒன்”என பெயரிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவமிக்க இலகுவான சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி உருவாக்கி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் அனுபம் கபூர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
மாற்றுத்திறனாளிகளின் உடலுக்கு ஏற்றவாறும், கையாள்வதற்கு எளிமையாகவும், 8.5 கிலோ எடையுடனும் “ஒய்டி ஒன்” சக்கர நாற்காலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு துல்லியமாக கட்டமைக்கப்பட்ட இந்த இலகுவான சக்கர நாற்காலி “மோனோ ட்யூப் ரிஜிட் பிரேம்” மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐஐடி இயக்குனர் காமகோடி, தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இந்தியாவிலேயே மிகவும் எடை குறைவான சக்கர நாற்காலி செய்துள்ளோம். ஐ ஐ டி மெட்ராஸில் தான் இதற்கான ஆய்வு நடந்தது இப்போது சக்கர நாற்காலியாக மாறி உள்ளது. சக்கர நாற்காலிக்கான எடையை குறைப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது ஏனென்றால் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு உண்டாக்குவதற்கு இது வழிவகுக்கும்.
பல துறைகள் சார்ந்தவர்கள் இதில் ஈடுபட்டு முழுமைப்படுத்தி உள்ளனர். இதன் விலை மற்ற சக்கர நாற்காலிகளை விட விலை குறைவு. முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சக்கர நாற்காலி 75 ஆயிரம் ரூபாய்க்கு நாளை முதல் விற்பனைக்கு வரும். Trymobility.com என்ற இணையதள முகவரியில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அலுமினியம், கார்பன் பைபர் போன்றவற்றை கொண்டு இந்த நாற்காலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பு தன்மைக்கு ஏற்ப இந்த சர்க்கரை நாற்காலி எந்த அளவிற்கு தகவமைப்பு செய்யப்பட வேண்டும் என்று ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.
இது போன்ற எடைக் குறைவான சக்கர நாற்காலியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்திருந்தால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அளவில் செலவாகும். மெக்கானிக்கல், புரொடக்க்ஷன், உள்ளிட்ட 5 வகையான பொறியியல் துறை சார்ந்தவர்கள் இதில் இணைந்து தயாரித்துள்ளனர். சிவில், மெக்கானிக்கல், புரொடக்க்ஷன் பொறியியல் துறைக்கு ஆட்கள் இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் இருந்து எங்களை அணுகி துறை சார்ந்த பொறியியல் வல்லுனர்கள் தேவை இருக்கிறது என்று சொல்கிறார்கள். எல்லா நிறுவனங்களிலும் எப்படி ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறதோ அதே போல் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் இருக்கத்தான் செய்கிறது. அதன் காரணமாகத்தான் முடிந்தவரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் உள்ளிட்ட மாற்று செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.